தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் சூப்பர் ஓவரில் வீழ்ந்த நியூசி... வெலிங்டன் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா! - முன்ரோ

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றிபெற்று, நியூசி.யின் வெலிங்டன் மைதான தொடரின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ind-wins-against-nz-in-super-over-on-4th-t20i
ind-wins-against-nz-in-super-over-on-4th-t20i

By

Published : Jan 31, 2020, 5:04 PM IST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி வெலிங்டனில் நடந்தது. இதில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதால் நியூசி. கேப்டனாக டிம் சவுதி செயல்பட்டார். இதையடுத்து டாஸ் வென்ற டிம் சவுதி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் மனீஷ் பாண்டே, கேஎல் ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்புகுந்த நியூசி. அணிக்கு வழக்கம்போல் கப்தில் - முன்ரோ தொடக்கம் கொடுத்தனர்.

இதில் கப்தில் 4 ரன்களில் ஆட்டமிழக்க, செஃபெர்ட் - முன்ரோ ஜோடி இணைந்தது. இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு அதிரடியாக ஆட, நியூசி. அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 92 ரன்களை எட்டியது. இதற்கிடையே முன்ரோ அரைசதம் அடித்து மிரட்டினார்.

அரைசதம் அடித்த முன்ரோ

பின்னர் தூபே வீசிய 12ஆவது ஓவரின்போது முன்ரோ 64 ரன்களில் ரன் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து சாஹல் பந்தில் டாம் ப்ரூஸ் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.

இதையடுத்து ராஸ் டெய்லர் - செஃபெர்ட் இணை நிதானமாக ஆட்டத்தை எதிர்கொண்டது. 15ஆவது ஓவரின்போது செய்ஃபெர்ட் கொடுத்த இரண்டு கேட்களை இந்திய வீரர்கள் தவறவிட, ஆட்டத்தில் நியூசி. அணியின் கைகள் ஓங்கியது. 15 ஓவர்கள் முடிவில் நியூசி. அணி 3 விக்கெட்டுகள் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இதனால் அணியின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடயே சிறப்பாக ஆடிய டிம் செஃபெர்ட் அரைசதம் கடந்தார். இதனால் விக்கெட்டைக் கொடுக்காமல் ஆடிய நியூசி. அணியினர் 19 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது.

அரைசதம் அடித்த செஃபெர்ட்

இதனால் கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை வந்தது. கடைசி ஓவரை வீசுவதற்கு தாக்கூர் அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே ராஸ் டெய்லர் 24 ரன்களில் ஆட்டமிழக்க, டேரில் மிட்சல் களமிறங்கினார். பின்னர் இரண்டாவது பந்தில் டேரில் பவுண்டரி விளாச, மூன்றாவது பந்தில் எதிர்பாராதவாறு செஃபெர்ட் 57 எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார்.

கடைசி ஓவரை சிறப்பாக வீசிய ஷர்துல்

பின்னர் கடைசி மூன்று பந்துகளில் 3 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை வந்தது. டேரில் மிட்சல் - சாண்ட்னர் இணை களத்தில் இருந்தது. நான்காவது பந்தில் 1 ரன் எடுக்க, ஐந்தாவது பந்தில் மிட்சல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதில் ஒரு ரன் எடுத்து சாண்ட்னர் ரன் அவுட்டாக, ஆட்டம் மீண்டும் சூப்பர் ஓவருக்கு சென்றது. கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுத்து நியூசி. அணி நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

சூப்பர் ஓவரை இந்தியா சார்பாக வீசுவதற்கு கடந்தப் போட்டியைப் போல் மீண்டும் பும்ரா அழைக்கப்பட, நியூசிலாந்து சார்பாக டிம் செஃபெர்ட் - முன்ரோ இணை களமிறங்கியது. சூப்பர் ஓவரின் நான்காவது பந்தில் செய்ஃபெர்ட் ஆட்டமிழக்க, 6 பந்துகளில் நியூசிலாந்து 13 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 14 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

sஊப்பர் ஓவரை சூப்பராக வீசிய பும்ரா

பின்னர் நியூசிலாந்து அணி சார்பாக டிம் சவுதி பந்துவீச, கேஎல் ராகுல் - கோலி இணை களமிறங்கியது. சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் சிக்சர் விளாச, இரண்டாவது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. மூன்றாவது கேஎல் ராகுல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, நான்காவது பந்தில் கோலி 2 ரன்களை எடுத்தார். இதையடுத்து 5ஆவது பந்தில் கோலி பவுண்டரி விளாசி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிதந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றியதோடு இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க: கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடிதந்த ஹர்மன்ப்ரீத்!

ABOUT THE AUTHOR

...view details