தென் ஆப்பிரிக்கா, இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 17) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பிரியா புனியா (18), ஸ்மிருதி மந்தானா (18), பூனம் ராவத் (10) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் மிதாலி ராஜ் - ஹர்மன்பிரீத் கவுர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் ரிட்டையர்ஹர்ட் முறையில் களத்திலிருந்து வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மிதாலி ராஜ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 55ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிதாலி ராஜ் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 49.3 ஓவர்களில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களை எடுத்தது.