இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி இன்று கட்டாக்கில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 89, பொல்லார்ட் 74 ரன்களை எடுத்தனர்.
இதனிடையே, தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷாய் ஹோப் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் வேகமாக 3,000 ரன்களை அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனால், ஜாம்பவான் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனை முறியடிக்கப்பட்டது. விவியன் ரிச்சர்ட்ஸ் இச்சாதனையை படைக்க 69 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்ட நிலையில், ஹோப் தனது 67ஆவது இன்னிங்ஸில் இதனை எட்டியுள்ளார்.
இதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் வேகமாக 3,000 ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆம்லாவுக்கு அடுத்தபடியாக இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங்கில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஹோப், நடப்பு ஆண்டில் 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, இதுவரை 1,345 ரன்களை எடுத்துள்ளார்.