தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை 'சும்மா கிழி'த்தெடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள்..! - இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 387 ரன்களை குவித்துள்ளது.

IND v WI
IND v WI

By

Published : Dec 18, 2019, 6:01 PM IST

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல், ரோஹித் சர்மா இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ஏற்றி வந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களை ஜோடி சேர்த்த கே.எல். ராகுல் - ரோஹித் சர்மா

இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறிவந்த நிலையில், ஆட்டத்தின் 34ஆவது ஓவரில் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் தனது 28ஆவது சதத்தை பதிவு செய்தார். நடப்பு ஆண்டில் ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் ஏழாவது சதம் இதுவாகும். ரோஹித் சர்வாவைத் தொடர்ந்து கே.எல். ராகுல் 36ஆவது ஓவரில் தனது மூன்றாவது ஒருநாள் சத்ததை விளாசினார்.

மூன்றாவது ஒருநாள் சதம் அடித்த கே.எல். ராகுல்

இந்த ஜோடி வெற்றிகரமாக முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களை சேர்த்த நிலையில், கே.எல். ராகுல் அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி பொல்லார்ட் பந்துவீச்சில் டக் அவுட்டானர்.இந்த நிலையில், தனது ஆட்டத்தை அடுத்த கியருக்கு எடுத்துச் சென்ற ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களை பவுண்டரிகளும், சிக்சர்களுமாக அடித்து அதகளப்படுத்தினார்.

159 ரன்களில் ஆட்டமிழந்த ஹிட்மேன்

இதனால், நிச்சயம் அவர் மீண்டும் ஒருமுறை இரட்டை சதம் அடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், 44ஆவது ஓவரின் போது ஷெல்டன் காட்ரெல் பந்துவீச்சில் அவர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் தந்து 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில், 17 பவுண்டரிகள், ஐந்து சிக்சர்கள் அடங்கும். ரோஹித் சர்மா அவுட்டானப்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை கிழித்தெடுத்தனர். இவர்களது அதிரடியால் இந்திய அணியின் ரன்ரேட்ட் ஓவருக்கு ஓவர் எறியது.

பேட்டிங்கில் மாஸ் காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்

குறிப்பாக, அல்சாரி ஜோசப் வீசிய 45, 46 ஆவது ஓவரை எதிர்கொண்ட ரிஷப் பந்த் நான்கு சிக்சர்கள், மூன்று பவுண்டரிகள் என 38 ரன்களை சேர்த்தார். மறுமுனையில், ஸ்ரேயாஸ் ஐயர் தன்பங்கிற்கு ரோஸ்டான் சேஸ் வீசிய 47ஆவது ஓவரில் நான்கு சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 31 ரன்களை சேர்த்தார். இந்த ஜோடி 24 பந்துகளில் 72 ரன்களை சேர்த்த நிலையில், ரிஷப் பந்த் 39 ரன்களில் வெளியேறினார். 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் மூன்று பவுண்டரி, நான்கு சிக்சர்களை பறக்கவிட்டார்.

ரிஷப் பந்த்

அவரைத் தொடர்ந்து, 32 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் என 53 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் 49ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 387 ரன்களை குவித்தது. குறிப்பாக இந்திய அணி கடைசி ஆறு ஓவரில் 93 ரன்களை சேர்த்தது. இந்திய வீரர்கள் இப்போட்டியில் மொத்தம் 16 சிக்சர்கள், 34 பவுண்டரிகளை விளாசியுள்ளனர்.

இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2011இல் இந்தூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 411 ரன்களை குவித்ததே முதல் அதிகபட்ச ஸ்கோராகும் என்பது நினைவுகூரத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷெல்டான் காட்ரெல் இரண்டு, கீமோ பவுல், அல்சாரி ஜோசஃப், பொல்லார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையும் படிங்க:இந்த ஆண்டின் இரண்டு மிகப்பெரிய ஃபைனல்கள்... நினைவுகூறும் ஐசிசி!

ABOUT THE AUTHOR

...view details