தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டாவது டி20: வெஸ்ட் இண்டீஸை மீண்டும் அடித்து நொறுக்குமா இந்தியா? - இந்திய அணி டி20 போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணி
இந்திய அணி

By

Published : Dec 8, 2019, 10:30 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்க இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் மீண்டும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் கடந்த போட்டியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை கட்டுப்படுத்திவிடலாம் என்ற நோக்கில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதற்கேற்றார் போல் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸை இரண்டு ரன்னில் வெளியேற்றினார்.

ஆனால் அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர்களில் 207 ரன்களைக் குவித்தது. இந்திய அணி வீரர்கள் சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதும் இந்த அபார ரன் குவிப்புக்கு ஒரு காரணமாக இருந்தது.

சிம்ரான் ஹெட்மயர்

இதனால் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும் என்ற பிரஷருடன் களமிறங்கியது. அதிரடி வீரர் ரோஹித் சர்மா குறைந்த ரன்களில் வெளியேறினாலும் லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் பொறுப்புடன் ஆடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.

விராட் கோலி

எனவே, இன்றையப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்கும் என்றாலும், பந்துவீச்சில் ஸ்பின்னர்கள் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு சவலாக இருந்தனர். ஆனால், இந்திய வேகப்பந்துவீச்சு அவர்கள் முன்பு எடுபடவில்லை. அதிலும் குறிப்பாக வாரி வழங்கிய தீபக் சஹாருக்கு பதிலாக அனுபவ வீரர் சமி இன்று களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் பலமான பேட்டிங் உள்ள போதிலும், அந்த அணியின் பந்துவீச்சு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. குறிப்பாக கேஷ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சை இந்திய வீரர்கள் பொளந்துகட்டினர்.

இதனிடையே இன்றையப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து தொடரைக் கைப்பற்றும் நோக்கிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கிலும் களமிறங்குகின்றன. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கீரின்ஃபீல்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details