இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தித் தொடரைக் கைப்பற்றியது.
அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிக்களுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலைக்கு இந்திய அணித் தள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தொடர்ச்சியாக ஒன்பது தொடரைக் கைப்பற்றியுள்ளது, இந்திய அணி. அதனால் பத்தாவது தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி இன்றையப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு எதிராக எந்தவொரு ஒருநாள் தொடரையும் வென்றதில்லை என்ற மோசமான சாதனையை வைத்துள்ளது. கிட்டத்தட்ட 13ஆண்டுகளுக்கும் மேலாக தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று அதனை சாத்தியப்படுத்தும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.
ஆனால், இந்திய அணி கடந்த 15 ஆண்டுகளாக உள்நாட்டில் தொடர்ந்து இரு ஒருநாள் தொடர்களை இழந்ததும் இல்லை, தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததும் இல்லை. கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது.
மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணித்தோல்வியை தழுவியது. அதேசமயம் சென்னையில் நடைபெற்ற போட்டியிலும் தோல்வியடைந்துள்ளதால், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இன்றையப் போட்டியில் இந்திய அணித் தோல்வியை தழுவும் பட்சத்தில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வி மற்றும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு ஒரு நாள் தொடரை இழந்தது என்ற மோசமான சாதனையைப் படைக்கும்.
அணியின் பலமும் - பலவீனங்களும்;
இந்திய அணியின் டாப் ஆர்டர்களில் ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி ஆகியோர் இன்று அசத்தும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. நடுவரிசை வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்கள் அணியின் இறுதிக்கு உறுதுணையாக இருப்பர்.
ஆனால், இந்திய அணியின் ஃபினிஷிங் ரோல் தான் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மயங்க் அகர்வால், மனீஷ் பாண்டே ஆகியோர் கூடுதல் பேட்ஸ்மேனாக உள்ள நிலையில் இன்றைய போட்டியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.