இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய ஒருநாள் அணியில் அறிமுக வீரர்களாக குர்னால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பிட்னஸ் காரணமாக இங்கிலாந்து டி20 தொடரிலிருந்து விலக்கப்பட்ட தமிழ்நாடு வேகப்புயல் நடராஜன் தங்கராசு, உடற்தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்ததை அடுத்து, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.