இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் இன்று (பிப்.24) தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியிருக்கும் இஷாந்த் சர்மா, அவர் வீசிய இரண்டாவது ஓவரிலேயே டோமினிக் சிப்லியின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ, ரன் ஏதுமின்றி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜாக் கிரௌலி - ஜோ ரூட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தின.
இதில் ஜாக் கிரௌலி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் பந்துவீச வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், 17 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
மறுமுனையில் மீண்டும் பந்துவீச வந்த அக்சர் பட்டேல், அரைசதம் கடந்து விளையாடி வந்த ஜாக் கிரௌலியின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் - ஒல்லி போப் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து வருகிறது. இதனால் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும், ஒல்லி போப் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க:விபத்தில் சிக்கிய டைகர் உட்ஸ், உருக்குலைந்த நிலையில் கார் மீட்பு!