தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! - ரவிச்சந்திரன் அஸ்வின்

Ind Vs Eng: India won by 10 wickets
Ind Vs Eng: India won by 10 wickets

By

Published : Feb 25, 2021, 7:52 PM IST

Updated : Feb 25, 2021, 8:18 PM IST

19:48 February 25

பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் நேற்று (பிப்.24) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தனர்.  

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்  

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் டோமினிக் சிப்லி, ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.  

மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜாக் கிரௌலி அரைசதம் அடித்த கையோடு, 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 100 ரன்களுக்குள்ளாகவே இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  

மண்ணின் மைந்தன் அக்சர் பட்டேல்

மேலும் தனது சொந்த மண்ணில் விளையாடிய அக்சர் பட்டேல், அபார பந்துவீச்சால் எதிரணியின் பேட்டிங் வரிசையை நிர்மூலமாக்கினார். இதனால் 48.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிரௌலி 53 ரன்களை எடுத்தார்.  

இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.  

இந்தியா முதல் இன்னிங்ஸ்

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை தொடக்கம் தந்தது. தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தியது. இந்நிலையில், 11 ரன்களில் சுப்மன் கில் ஆட்டமிழக்க அவரைத் தொடந்து களமிறங்கிய புஜாரா ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தது. எனினும் 27 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார்.  

சுழலில் மாயாஜாலம் செய்த ரூட்

பின்னர் இரண்டாம் நாள் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரஹானே ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மாவும் 66 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், அஸ்வின், பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஜோ ரூட் பந்துவீச்சில் நடையைக் கட்டினர்.  

இறுதியாக இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் ஜோ ரூட் 8 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

மீண்டும் அசத்திய அக்சர்

பின்னர் 33 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அக்சர் பட்டேல் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது.  

இன்னிங்ஸின் முதல் பந்தில் ஜாக் கிரௌலியின் விக்கெட்டை வீழ்த்திய அக்சர், மூன்றாவது பந்தில் பேர்ஸ்டோவின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அதன்பின் களமிறங்கிய சிப்லி, ஜோ ரூட், பென் ஃபோக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து அக்சர் பட்டேலிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.  

அஸ்வின் அபாரம்

அதன்பின் அக்சர் பட்டேலுடன் விக்கெட்டை வேட்டையில் இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் கைப்பற்றினார்.  

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 400ஆவது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய மைல் கல்லை எட்டினார். இதனால் இங்கிலாந்து அணி 81 ரன்களிலேயே ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 5 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். மீதமிருந்த ஒரு விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் லபக்கினார். இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 49 ரன்களை இங்கிலாந்து நிர்ணயித்தது.  

இந்தியா அபார வெற்றி

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியாக ஜாக் லீச் வீசிய எட்டாவது ஓவரில் ரோஹித் சர்மா அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார்.

இதனால் 8 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதி போட்டியின் வாய்ப்பையும் இந்திய அணி உறுதிசெய்துள்ளது.

இதையும் படிங்க:சர்வதேச டெஸ்டில் 400 விக்கெட்- புதிய மைல் கல்லை எட்டிய அஸ்வின்!

Last Updated : Feb 25, 2021, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details