இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 05ஆம் தேதி சென்னையில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதில், முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 578 ரன் எடுத்து இங்கிலாந்து அணி டிக்ளர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களை எடுத்திருந்தார்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களை மட்டும் எடுத்தது. பின்னர், 241 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, அஸ்வினின் அபார பந்துவீச்சால் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இருப்பினும் இந்தியா அணியின் வெற்றிக்கான இலக்காக 420 ரன்களை நிர்ணயித்தது.
இந்த இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ரோஹித் சர்மா 12 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை ஏமாற்றினர். பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் கேப்டன் விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியைத் தோல்விலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார்.