அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்திருந்த இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களமிறங்கினர். தொடர்ந்து அபாரமாக இந்த இணை அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தியது.
அதன்பின் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேல் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய இஷாந்த் சர்மாவும் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஸ்டோக்ஸிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
மறுமுனையில் 96 ரன்களுடன் களத்திலிருந்த வாஷிங்டன் சுந்தர், இப்போட்டியில் சதமடிக்கும் வரை கடைசி விக்கெட்டிற்கு களமிறங்கிய சிராஜ் நிலைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவரும் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கிளின் போல்டாகினார்.