அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாக் கிரௌலி, டோமினிக் சிப்லி ஆகியோர் அக்சர் பட்டேலின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ ஒருபுறம் நிலைத்து ஆட, மறுமுனையில் விளையாடிய ஜோ ரூட் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜிடம் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதைத்தொடர்ந்து 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேர்ஸ்டோவும் சிராஜிடம் விக்கெட்டை இழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 78 ரன்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார். அதன்பின் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து144 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன்: இரண்டாவது சுற்றிற்கு முன்னேறிய இந்திய ஜோடி!