இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (பிப்.24) தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 57 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே ஒரு ரன்னுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இன்றைய போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரஹானே ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மாவும் 66 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் அடுத்தடுத்து ஜோ ரூட் பந்துவீச்சில் நடையைக் கட்டினர்.
அதைத்தொடர்ந்து ஒரு சில பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை கொடுத்த அஸ்வினும் 17 ரன்களில் ரூட்டிடம் விக்கெட்டை இழந்தார். இறுதியாக இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடித்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் ஜோ ரூட் 8 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் 33 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: மூன்றாம் நடுவரின் முடிவில் அதிருப்தி!