இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், மற்றொன்றில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.24) நடைபெறவுள்ளது. மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை விளையாடியுள்ள இரண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றிருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை வென்றிருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.
மேலும், இதுவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எந்த சர்வதேச கோப்பைகளையும் வென்றதில்லை. அதை பூர்த்தி செய்வதற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு நல்ல வாய்ப்பு. அதன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தியாவுக்கு உள்ள கடைசி வாய்ப்பும் இந்த டெஸ்ட் தொடர்தான். ஏனெனில் இங்கிலாந்து தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட முடியும்.
அதேசமயம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இதுவரை நடந்திருக்கும் 15 பகலிரவு போட்டிகளில் ஒன்றுகூட டிரா ஆனதில்லை. அனைத்தும் முடிவைக் கொடுத்திருக்கின்றன. அதனால், இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கும் என்பது எழுதப்படாத உண்மை.
அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால்தான் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத் தொடரை வென்றாலே போதும். அதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒருவேளை, இந்தியா இப்போட்டியில் தோற்று விட்டால், அதிகபட்சம் இந்தத் தொடரை டிரா செய்யவே முடியும். அதனால், இந்திய அணிக்கு வெற்றி மிகவும் அவசியம்.
இந்திய அணி
சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வென்ற நம்பிக்கையோடு களமிறங்கும் இந்திய அணியில், இப்போது உமேஷ் யாதவும் இணைந்திருக்கிறார். அதனால், அணி இன்னும் பலமடையும். காயத்தால் முதலிரண்டு போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படாத உமேஷ், இப்போது ஷர்துல் தாக்கூருக்குப் பதில் அணியில் இணைந்திருக்கிறார்.
மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஓய்வளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ராவும் இப்போட்டியின் பிளேயிங் லெவனில் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அனுபவ வீரர் இஷாந்த் சர்மாவுக்கு இது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும். இதனால் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி இப்போட்டியில் விளையாடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் கடந்த முறை வங்கதேச அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அதனால் நாளை தொடங்கும் போட்டியிலும் இஷாந்தின் வேகம் இந்திய அணிக்கு பெரும் பலனை வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரஹானே, சுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோருடன் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் இந்திய அணி இப்போட்டியை வெல்வதற்கு தேவையான பலத்துடன் இருப்பது போலவே தெரிகிறது.