இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பிப்.13ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களையும், இங்கிலாந்து அணி 134 ரன்களையும் எடுத்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக விளையாடி 135 பந்துகளில் சதமடித்தார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும்.
மேலும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், மூன்றாவது முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் மற்றும் சதத்தைப் பதிவு செய்த முதல் இந்தியர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.
இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஐயன் போத்தம், டெஸ்ட் போட்டிகளில் ஐந்து முறை 5 விக்கெட் மற்றும் சதத்தைப் பதிவு செய்துள்ளார். இப்பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சர்ச்சை வழக்கில் சிக்கிய யுவராஜ்: 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!