இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை செப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 249 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மொயீன் அலி, ஜாக் லீச் ஆகியோரது சுழலில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது.
இதில் ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷப் பந்த் என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தது.
இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின்னர் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்டில் ஐந்தாவது சதத்தை நிறைவு செய்து அசத்தினார்.