சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் அஸ்வின் - விராட் கோலி இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து அசத்தினார். இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகு 286 ரன்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்ஸை நிறைவு செய்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 106 ரன்களையும், கேப்டன் விராட் கோலி 62 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டோமினிக் சிப்லி 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோரி பர்ன்ஸ் - லாரன்ஸ் இணை அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.