சிட்னியில் இன்று(ஜனவரி 7) தொடங்கிய இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - வில் புகோவ்ஸ்கி இணை தொடக்கம் தந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் புகோவ்ஸ்கிவுடன் ஜோடி சேர்ந்த லபுசாக்னே இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை தட்டுத்தடுமாறி விளையாடினார். இந்நிலையில் 7.1 ஓவர்கள் வீசப்பட்டநிலையில் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்னர் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மழை நின்ற பின் 14 ரன்களுடன் புகோவ்ஸ்கியும், 2 ரன்களுடன் லபுசாக்னே இணையும் மீண்டும் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
இதில் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இருப்பினும், ஒருவழியாக நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புகோவ்ஸ்கி அரைசதம் கடந்து அணிக்கு உதவினார்.
இதனால் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்தது. அந்த அணியில் புகோவ்ஸ்கி 54 ரன்களுடனும், லபுசாக்னே 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் மட்டுமே விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க: சீரி ஏ: ஏசி மிலானை வீழ்த்தி ஜுவென்டஸ் அபார வெற்றி!