பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜன.10) நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் 192 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்தது.
அந்த அணியில் லபுசாக்னே, ஸ்மித், காமரூன் கிரீன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை எடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 ரன்களை இந்தியாவுக்கு இலக்காகவும் நிர்ணயித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
இதில் சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹெசில்வுட் வீசியப் பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த புஜாரா வழக்கம்போல், தனது தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைச் சோதித்தார்.