பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று (ஜன. 10) முடிந்த நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை நிறைவுசெய்த ஆஸ்திரேலிய அணி 407 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 54 ரன்களுடனும், சுப்மன் கில் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 309 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஐந்தாம் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் கேப்டன் ரஹானே 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் தொடங்கினர். இதில் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரஹானே, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நாதன் லயனிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினார்.
இதனால் இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், டிராவிலாவது நிறைவுசெய்யுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியது. பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.