சிட்னியில் நேற்று (ஜன.07) இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் அணியில் மார்னஸ் லபுசாக்னே 67 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களுடனும் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடந்தனர்.
இன்றைய ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்தும் அணிக்கு உதவினார்.
மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லபுசாக்னே 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த மேத்யூ வேட் 13 ரன்களில் ஜடேஜாவிடம் விக்கெட்டை இழக்க, கேமரூன் கிரீன் ரன் ஏதுமின்றி பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களை எடுத்தது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 76 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க:டக்கார் ராலி 2021: விபத்தில் சிக்கிய இந்திய வீரர்!