ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தின் 18ஆவது ஓவரின்போது காயமடைந்தார். இருப்பினும் அவர் இறுதிவரை களத்தில் நின்று 44 ரன்களைக் குவித்திருந்தார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸின்போது மருத்துவச் சோதனைக்காக ஜடேஜா போட்டியிலிருந்து வெளியேறிய பின்னர், அவருக்கு மாற்று வீரராக யுஸ்வேந்திர சஹால் களமிறங்கி ஓவர்களை வீசத்தொடங்கினர்.
இதனைக்கண்ட ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டீன் லங்கர், மாற்று வீரரை பந்துவீச எவ்வாறு அனுமதிப்பீர்கள் எனப் போட்டி நடுவர் டேவிட் பூனிடம் முறையிட்டார். ஆனால் தற்போதுள்ள ஐசிசி விதிகளின்படி மாற்று வீரராக வருபவர் பேட்டிங், பந்துவீச்சில் அணிக்கு உதவலாம் என்பதை போட்டி நடுவர் எடுத்துரைத்துள்ளார். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் சஹால் பந்துவீச அனுமதிக்கப்பட்டார். இப்போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய சஹால், 25 ரன்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி வெற்றிபெறுவதற்கு உதவினார். மேலும் சஹால் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தலையில் அடிபட்டு போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே அப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி கிடையாது' - நியூசிலாந்து சுகாதார அமைச்சகம்