பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசிப்போட்டி இன்று (ஜன.15) பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முன்னதாக இத்தொடரில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியும், ஒன்றில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளது. மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதனால், இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டியாக இப்போட்டி அமைந்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
முன்னதாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு, இந்திய அணியின் 300ஆவது டெஸ்ட் வீரராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதேபோல், மற்றொரு தமிழ்நாடு வீரரான வாஷிங்டன் சுந்தரும் இன்றைய போட்டியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.