ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி சாதித்தது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கியது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்:
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வார்னர் ஒரு ரன்னிலும், மார்கஸ் ஹாரிஸ் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டெஸ்டில் தனது நான்காவது சதத்தைப் பதிவு செய்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் டிம் பெய்ன் 50 ரன்களை சேர்த்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 115.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா மூன்று விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தியா முதல் இன்னிங்ஸ்
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் சுப்மன் கில் 7 ரன்களிலும், புஜாரா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மாவும் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரை சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - மயாங்க் அகர்வால் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அகர்வால் 38 ரன்களிலும், ரஹானே 37 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
வாஷிங்டன் - ஷர்தூல் அசத்தல்
பின்னர் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - ஷர்தூல் தாக்கூர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஃபாலோ-ஆனிலிருந்து மீட்டெடுத்தனர். மேலும் இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதலாவது அரை சதத்தையும் பதிவு செய்தனர்.
இதனால் இந்திய அணி 111.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்தூல் தாக்கூர் 67 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹெசில்வுட் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸி
அதன்பின் 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருப்பினும் ஹாரிஸ் 38 ரன்களிலும், வார்னர் 48 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
சிராஜ் ஐந்து விக்கெட்:
அதன்பின் வந்த ஆஸ்திரேலிய வீரர்களில் ஸ்மித் நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். பின்னர் ஷர்தூல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 55 ரன்களை எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது சிராஜ் ஐந்து விக்கெட்டுகளையும், ஷர்தூல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.