ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை (ஜன.15) பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. போட்டி தொடங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் இணை இந்திய அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசியது.
இதில் 38 ரன்களில் மார்கஸ் ஹாரிஸ் ஆட்டமிழக்க, அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னரும் 48 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய லபுசாக்னே 25 ரன்களிலும், மேத்யூ வேட் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.