சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (ஜன.08) தொடங்கியது.
இதில் மார்னஸ் லபுசாக்னே 67 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லபுசாக்னே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 136 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். இப்போட்டியில் ரோஹித் சர்மா சிக்சர் விளாசியதன் மூலம், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக சர்வதேச அளவில் 100 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
பின்னர் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதேபோல் மறுமுனையில் சிறப்பாக விளையாடி சர்வதேச டெஸ்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்த இளம் வீரர் சுப்மன் கில்லும் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த புஜாரா - கேப்டன் அஜிங்கியா ரஹானே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பைத் தடுத்தது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் ரஹானே 5 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 242 ரன்கள் பிந்தங்கிய நிலையில் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன்: கடுமையான தனிமைப்படுத்தல் நெறிமுறைகளின் கீழ் வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதி