இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று (ஆக. 15) சர்வதேசப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்த சில மணி நேங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்நிலையில் ரெய்னா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரெய்னாவின் கடிதத்தில், "மிகச் சிறு வயதிலிருந்தே நான் எனது சிறிய நகரத்தின் தெருவில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி விட்டேன். நான் இந்திய அணியின் வீரராகவே வளர்ந்தேன். என் வெற்றிக்கு இதுநாள் வரை உறுதுணையாக இருந்த அனைவரையும் நான் ஒருநாள் கூட நினைக்காமல் இருந்தது இல்லை.
நான் விளையாட்டில் சிறந்து விளங்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு நம்ப முடியாத சவாரி. என் ஏற்றத்தாழ்வுகளின்போது என்னை ஆதரித்தவர்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது. என் பெற்றோர், என் மனைவி பிரியங்கா, குழந்தைகள் கிரேசியா, ரியோ, சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரின் ஆதரவும் தியாகமும் இல்லாமல் இந்தப் பயணமானது சாத்தியமில்லை.
அதேபோல் இந்திய அணி வீரர்களுடைய ஆதரவும் இதில் அடங்கும். அதிலும் குறிப்பாக மிகச்சிறந்த வீரர்களுடன் விளையாடிய தருணங்கள் எனது மனதில் ஆழப் பதிந்துள்ளது. அதில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, குறிப்பாக மகேந்திர சிங் தோனி ஆகியோர் என்னை சிறப்பாக வழிநடத்திச் சென்றனர்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்திய அணிக்காக விளையாட விரும்பிய சிறுவனின் கனவை நனவாக்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கும், உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கும் எனது நன்றிகள்.
இறுதியாக, என் ரசிகர்களே... பல ஆண்டுகளாக நீங்கள் என் மீது பொழிந்த அன்பும் புகழும் காரணமாகவே நான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டை மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவதற்கு எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றிகள். என்றென்றும், டீம் இந்தியா. ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 18 டெஸ்ட், 226 ஒருநாள், 78 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ள சுரேஷ் ரெய்னா, எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய முதல் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தோனி ஓய்வு : ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!