கரோனாவால் உலகின் பல்வேறு நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டன. தற்போது அதன் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வருவதால், விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து, அவர்கள் தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அவர் வீட்டின் சுவர் மீது பந்தை எறிந்து விளையாடுவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளும் காணொலியை இணைத்து, திருமணமான விளையாட்டு வீரர்களுக்கு சுவாரஸ்யமான ஆலோசனை ஒன்றையும் ட்விட்டரில் வழங்கியுள்ளார்.
அந்தப் பதிவில், "உங்கள் வீட்டுச் சுவரின் மீது பந்தை எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் எறிந்து விளையாடுங்கள். ஒருவேளை உங்கள் வீட்டு சன்னலை உடைத்து விட்டால் உங்களது மனைவியிடமிருந்து தப்பியோடி, வெளியே நீங்கள் தங்குவதற்கும், உணவிற்கும் வழியைத் தேடுங்கள்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:‘மெக்கல்லம் கிரிக்கெட்டிற்கு கிடைத்த பரிசு’ - கேன் வில்லியம்சன்!