கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் முற்றிலுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது ஒருசில விளையாட்டுப் போட்டிகளுக்குப் பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம்-உல்-ஹக், பந்துவீச்சாளர்கள் உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்ட காரணத்தால் பந்தைப் பளபளப்பாக மாற்றுவதற்கு வாஸ்லினைப் பயன்படுத்துவார்கள் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "கரோனா வைரஸ் காரணமாக நீங்கள் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளீர்கள். ஒரு பந்துவீச்சாளரை உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதிக்காவிட்டால், பந்து அவ்வளவாக சுற்றாது. மேலும் அது ரன்களை வரி இறைக்கும். இதனால் பந்துவீச்சாளர்கள் பந்தைப் பளபளப்பாக மாற்ற வாஸ்லின் போன்ற பிற விஷயங்களுக்குத் திரும்புவார். உமிழ்நீர் தடைக்குப் பின்னால் உள்ள தர்க்கம் எனக்குப் புரியவில்லை.
மேலும் ஒரு விக்கெட் எடுத்த பிறகு, பந்துவீச்சாளர் தனது அணியினருடன் கொண்டாட மாட்டாரா? ஒரு பந்துவீச்சாளர் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், கேப்டன் அவரிடம் சென்று அவருடன் பேசமாட்டாரா? பேட்ஸ்மேன்கள் ஆறு அடி இடைவெளியில் நின்று பேசும் உத்தியைக் கையாள்வார்களா? விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது மிகவும் நல்ல விஷயம்தான். ஆனால், விதிகளை மாற்றுவது ஒரு தீவிரமான பிரச்னையாக இருக்கிறது" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.