இந்தியாவில் கிரிக்கெட் போட்டி மதமாக பார்க்கப்பட்டாலும், தமிழக ரசிகர்கள் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்த்து வருகின்றனர். அது நம் எதிரி என சித்தரிக்கப்படும் பாகிஸ்தான் அணியாக இருந்தாலும் சரி. 20 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி சென்னை ரசிகர்கள் யார் என்பதை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றாலும், ஒரு சில போட்டிகள் க்ளாசிக் போட்டிகளாக இருக்கின்றன. இந்த லிஸ்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை தவிர்த்து டெஸ்ட் கிரிக்கெட் பற்றி நினைத்துப் பார்த்திட முடியாது.
இதுவரை பாரம்பரியமாக நடைபெற்றுவந்த டெஸ்ட் போட்டி, நாளைமுதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று புதிய பரிமாணத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் டெஸ்ட் போட்டிகளில் சிறந்தது எது என ட்விட்டரில் கேள்வி எழுப்பி, அதற்கு 4 ஆப்சன்களை வழங்கியிருந்தது.
1954இல் ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி, 1987இல் பெங்களூருவில் இந்தியாவுக்கு எதிரான வெற்றி, 1994இல் காராச்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி, 1999இல் சென்னையில் இந்தியாவுக்கு எதிரான வெற்றி. இந்த கேள்விகளுக்கு வாக்களிக்க ஜூலை 26 முதல் ஜூலை 29ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கு ஃபேஸ்புக், ட்விட்டரில் மொத்தம் 15, 847 பேர் வாக்களித்தனர்.
இதில், 65 சதவிகித ரசிகர்கள் 1999இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றிபெற்றதே அணியின் சிறந்த போட்டி என வாக்களித்தனர். சென்னை ரசிகர்களின் நடத்தையும், பாகிஸ்தான் அணியின் ஆட்டத்திறனையும் கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள், இப்போட்டிதான் சிறந்தது என்று வாக்களித்துள்ளனர்.
20 வருடங்களுக்கு முன் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி சென்னை ரசிகர்களுக்கு knowledgeable crowd என்ற பெயரை பெற்றுத் தந்தது. 1999 ஜனவரி 28ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
மேட்ச் சமரி:
- பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 238 ரன்கள்.
- இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் எடுத்தது.
- பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்.
- இந்திய அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட்.
இப்போட்டியில் சில கவனிக்கத் தவறிய விஷயங்கள்:
இப்போட்டியில், அஃப்ரிடி இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியிருந்தார். வெங்கடேஷ் பிரசாத் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசினார். 275 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி இவரது பந்துவீச்சால் 286 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இதையெல்லாம் விட சச்சினின் சதம்தான் இப்போட்டியின் ஹைலைட்டாக இருந்தது.
இந்திய அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சச்சின் அவுட் ஆனார். அந்த சமயத்தில்தான் ஆட்டத்தின் போக்கு முற்றிலும் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது.
இப்போட்டியும் 1996 உலகக்கோப்பை போன்றுதான், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. இருப்பினும், கொல்கத்தா ரசிகர்களைப் போல மைதானத்தின் இருக்கைகளை எரிக்கவில்லை சென்னை ரசிகர்கள், பாகிஸ்தான் அணியின் (fighting Sprit) போராட்டக் குணத்தைக் கண்டு மைதானத்தில் எழுந்து நின்று கைகளைத் தட்டினர். இந்தியாவை வென்ற அணிக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து கைதட்டல்கள் கிடைப்பது ஆச்சரியம்தான். அதுவும் பாகிஸ்தான் அணிக்கு கிடைப்பதெல்லாம் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான்
ஏனெனில் பாகிஸ்தான் அணியை பரம எதிரியாக பார்க்கும் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்த்தனர் சென்னை ரசிகர்கள். இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை சுற்றிவந்து ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
"நான் கிரிக்கெட் விளையாடியதிலேயே சென்னை சேப்பாக்கம் ரசிகர்கள்தான் கிரிக்கெட்டின் அறிவார்ந்த ரசிகர்கள் (Knowledgeable crowd) " என்று பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்தார்.
மைதானத்தை சுற்றி வலம் வந்த பாக் வீரர்கள்
இந்தியாவில் இருந்து இத்தகைய பாராட்டு கிடைத்ததால்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் இப்போட்டியை பாகிஸ்தானின் சிறந்த வெற்றி என்று தீர்மானித்தார்கள் போல. இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன சச்சின், இரண்டாவது இன்னிங்ஸில் முதுகு வலியோடு பேட்டிங் செய்து அணியை காப்பாற்ற முயற்சித்தார்.
பாகிஸ்தான் அணியின் வெற்றியால் சச்சினின் போராட்ட குணம் பெரிதாக கவனிக்கப்படாமல் போனது. பொதுவாக, வரலாற்றின் சிறந்த போட்டிகளில் நடுவர்கள் ஒரு சில தவறு செய்திருப்பார்கள். ஆனால், போட்டியின் சுவாரஸ்யத்தால் அது கவனிக்கப்படாமல் இருந்துள்ளது. அதுபோல இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கங்குலிக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அம்பயரின் அலட்சியம்:
சக்லைன் முஷ்டாக்கின் ஓவரில் கங்குலி அடித்த பந்து ஷார்ட் பாயிண்ட் திசையில் நின்று கொண்டிருந்த ஃபீல்டரின் காலில் பட்டு, பின் தரையில் குத்தி எழும்பிய பிறகே மொயின் கான் பிடித்தார். ஆனால், அப்போதைய நடுவர் ஸ்டீவ் துனே (நியூசிலாந்து), லெக் அம்பயர் வி.கே. ராமசாமி உடன் ஆலோசனை செய்தப் பிறகு கங்குலி அவுட் என அறிவித்தார்.
கங்குலிக்கு அவுட் வழங்கிய அம்பயர்
அப்போது ரிவ்யூ எடுக்கும் வசதியும் இல்லை என்பதால் கங்குலி வேறு வழியில்லாமல் பெவிலியனுக்குத் திரும்பினார். ஒருவேளை தற்போது நவீன கிரிக்கெட்டில் இருக்கும் ரிவ்யூ அப்போது இருந்திருந்தால், கங்குலி மீண்டும் விளையாட அழைக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் கங்குலியின் அவுட் அப்போது எந்த ஒரு சர்ச்சையையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை கங்குலி அவுட்டா இல்லையா என்ற தீர்ப்பை மூன்றாவது நடுவரிடம் விட்டிருக்கலாம். இல்லையெனில், கங்குலியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்திருக்கலாம்.
அப்படி நடந்திருந்தால், போட்டியின் முடிவு முற்றிலுமாக மாறியிருக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டாகவும் சென்னை போட்டி இருந்திருக்காது. கபில்தேவ் போன்று அந்த 12 ரன்களை அவர் சிக்சர்களாக பறக்க விட்டுக் கூட அணியை வெற்றிபெற வைத்திருப்பார்.
ஒரு நடுவரின் சிறு அலட்சியம் ஒரு போட்டியின் முடிவை முற்றிலும் மாற்றி அமைக்கிறது. இதனால், வரலாறும் கொண்டாட்டங்களும் மாறுகின்றன.