இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமாகத் திகழ்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்ரமணியம் பத்ரிநாத். இந்நிலையில் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி கொடுத்து தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பத்ரிநாத், "தோனியைப் பொறுத்தவரை வீரர்களது செயல்பாடுகள் மிகவும் முக்கியம் என்று எப்போதும் உணர்ந்தார். அவர் பெரும்பாலான நேரங்களில், அணியை கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெளியேற்றுவதே என்னுடைய பணி என்று கூறுவார்.
அவரது கேப்டன்ஷிப்பில் நான் விளையாடியபோது, எனது பங்கானது நடுத்தர வரிசையில் இருந்தது. தோனியின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், அவர் வீரர்களுக்குக் கூடுதல் வாய்ப்பை எப்போதும் அளிக்கிறார். ஆனால், அவருக்கு ஏற்றவாறு வீரர்களின் செயல்பாடுகள் இல்லையென்றால், கடவுள் நினைத்தால் கூட உங்களைக் காப்பாற்ற இயலாது. மாறாக, 'நான் அவருக்கு வாய்ப்புகளைத் தருவேன், அவர் தன்னை நிரூபிக்கட்டும்' என்ற தனது முடிவில் எப்போதும் உறுதியாக இருப்பார்" என்று தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் இருந்து எந்த ஒரு சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி தனது 39ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.