விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் மூலம், முதல்முறையாக தொடக்க வீரராகக் களமிறங்கிய இந்திய வீரர் ரோஹித் ஷர்மா இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி (176, 127) அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர், இரண்டு முறையும் கேஷவ் மஹராஜ்ஜின் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், 41 வருடங்களுப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிரண்டு இன்னிங்கிஸிலும் சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமில்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் (13) அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார்.
நேற்றைய நான்காம் ஆட்டநாளின் இரண்டாவது இன்னிங்ஸில், அவர் 127 ரன்களுக்கு கேஷவ் மஹராஜ் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார் என அவரை பாராட்டி பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டது.
இந்த வீடியோவைக் கண்ட ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், வாவ், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர், இரண்டு இன்னிங்ஸிலும் சதம், இருமுறை ஸ்டெம்பிங்கில் அவுட் இப்படி ரோஹித் ஷர்மா அடித்து எதுவுமே இந்த வீடியோவில் இல்லை. மீண்டும் ஒருமுறை இதுபோன்ற நல்ல ஹைலைட்ஸ் வீடியோவை வெளியிட்டதற்காக பிசிசிஐக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் சுட்டிக் காட்டியது போலவே, ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அவரை பாராட்டுவதுதான் பிசிசிஐ வெளியிட்ட அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. முன்னதாக, இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சை பாராட்டும்விதமாக, தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமாவை இஷாந்த் அவுட் செய்த வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
பிசிசிஐ பதிவை ட்ரோல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்
ஆனால், டெம்பா பவுமா அவுட்டான மகிழ்ச்சியில் இஷாந்த் ஷர்மா, கோலி ஆகியோர் ஈடுபட்டது மட்டும்தான் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவைக் கண்ட ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், இஷாந்த் ஷர்மாவின் சிறப்பான பந்துவீச்சில் டெம்பா பவுமா அவுட்டான வீடியோ அதில் சேர்க்கப்படவில்லை என்று பிசிசிஐ கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.