தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 10, 2019, 8:59 PM IST

Updated : Jul 10, 2019, 10:32 PM IST

ETV Bharat / sports

'தகர்ந்தது இந்தியாவின் உலகக் கோப்பை கனவு' - ரசிகர்கள் சோகம்

மான்செஸ்டர்: உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி போராடி தோல்வி பெற்றதால் உலகக்கோப்பை கனவு தகர்ந்து போயுள்ளது.

நியூசிலாந்து

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 46.1 ஓவர்களில் 211 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி- ராகுல்

இந்நிலையில் இன்று எஞ்சியிருக்கும் ஓவர்களுக்கு பேட்டிங்கை தொடர்ந்தது நியூசிலாந்து அணி. அப்போது சிறப்பாக ஆடிய ராஸ் டெய்லர் ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கால் 74 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே லாதம் 10 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஹென்றி 1 ரன்னில் வெளியேற, கடைசி ஓவரை போல்ட் - சாண்ட்னர் இணை எதிர்கொண்டது. அந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது.

சான்ட்னர்

இதனால் இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, பாண்ட்யா, ஜடேஜா மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். 240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட வந்த இந்திய அணி ஆரம்பமே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து மிகுந்த ஏமாற்றமளித்தது. அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் வெளியேறியதால் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் சிக்கி கொண்டது.

இளம் வீரர்கள் பண்ட்டும், பாண்ட்யாவும் தலா 32 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தனர். இருப்பினும் அவர்களும் நீண்ட நேரம் களத்தில் சோபிக்கவில்லை. இக்கட்டான நிலையில் தோனியும், ஜடேஜாவும் களமிறங்கினர். அதிர்ச்சியில் துவண்டு கிடந்த இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ரவீந்திர ஜடேஜா ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்தார்.

தோனி-ஜடேஜா

ஒரு முனையில் தோனி விக்கெட் சரியாமல் பார்த்துக்கொள்ள மறுமுனையில் ஜடேஜா நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சாளர்களைச் சோதித்தார். அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா யாரும் எதிர்பாராத வண்ணம் போல்ட்டின் பந்தை அடித்து ஆட முற்பட்டு தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இது இந்திய ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் தோனி களத்தில் இருந்ததால் எப்படியும் வெற்றி பெற வைப்பார் என ரசிகர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சிக்ஸர் அடித்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார் தோனி. ஆனால் விதி விளையாடி துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது ரன் ஓடுகையில் ரன் அவுட்டாகி பெரும் இடியை ரசிகர்களின் தலையில் அவர் இறக்கினார்.

வேதனையில் ரசிகர்கள்

தோனி அவுட்டான அடுத்த நொடியே இந்திய அணியின் தோல்வி உறுதியானது. உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இந்திய ரசிகர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்து தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணித் தரப்பில் தோனி 50 ரன்களும், ஜடேஜா 77 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் வெட்டோரி கூறிய அறிவுரையின்படி சிறப்பாகச் செயல்பட்டு அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது நியூசிலாந்து. 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jul 10, 2019, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details