கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து, இன்று சிட்னியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியின் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தீப்தி ஷர்மாவின் உதவியால் 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களை எடுத்தது. தீப்தி ஷர்மா 46 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் உட்பட 49 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜெஸ் ஜோனசென் இரண்டு விக்கெட்டுகளும், எல்லிஸ் பெர்ரி, டெலிசா கிம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீராங்கனை அலிசா ஹீலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில், அவருக்கு ஏற்றவாறு சிங்கிள் எடுத்து விளையாடிவந்த பெத் மூனி ஆறு ரன்களிலே ஷீகா பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும், அலிசா ஹீலேவின் அதிரடி ஆட்டம் குறைந்தபாடில்லை. இந்திய அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு அனுப்பி அணியின் ஸ்கோரை உயர்த்திவந்தார். இந்த நிலையில், மூன்றாம் வரிசையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் மெக் லானிங் ஐந்து ரன்களுக்கு ராஜேஸ்வரி ஜெயக்வாத் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
அலிசா ஹீலே விக்கெட்டை எடுத்த பூனம் யாதவ் பூனம் யாதவ் வீசிய 10ஆவது ஓவரின் நான்காவது பந்தில் சிக்சர் அடித்து அரைசதம் கடந்த அலிசா ஹீலே, அடுத்த பந்திலேயே பூனம் யாதவிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, மீண்டும் பந்துவீச வந்த அவர் 12ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ரேச்சல் ஹைன்ஸையும், அடுத்த பந்தில் நட்சத்திர ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரியையும் அவுட் செய்தார்.
இதையடுத்து, பூனம் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெஸ் ஜோனசெனின் கேட்சை விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா நழுவவிட்டதால் ஹாட்ரிக் வாய்ப்பு நூலளவில் நழுவியது. இருப்பினும் இந்த ஒரு ஓவர் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இந்தியாவின் பக்கம் திருப்பியது. இதைத்தொடர்ந்தது, மீண்டும் 14ஆவது ஓவரை வீச வந்த பூனம் யாதவ், ஜெஸ் ஜோனசெனின் விக்கெட்டை கைப்பற்றினார்.
அலிசா ஹீலே விக்கெட்டை எடுத்த பூனம் யாதவ் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முன்னதாக முத்தரப்பு தொடரில் காயம் காரணமாக விளையாடாமலிருந்த பூனம் யாதவ், இப்போட்டியில் நான்கு ஓவர்களில் 19 ரன்களை மட்டும் வழங்கி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகி விருதை பெற்று கம்பேக் தந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பெர்த்தில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் - தாய்லாந்து அணிகளும், அதன்பின் நியூசிலாந்து - இலங்கை அணிகளும் மோதவுள்ளன.
இதையும் படிங்க:சச்சின் நினைவிலிருந்து நீங்காத பிரக்யான் ஓஜா ஓய்வு!