பெர்த் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் மகளிர் அணிகளுக்கு இடையே மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் ஆறாவது லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. காய்ச்சல் காரணமாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இப்போட்டியிலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக ரிச்சா கோஷ் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அணியின் தொடக்க வீராங்கனை தனியா பாட்டியா இரண்டு ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இருப்பினும் மறுமுனையிலிருந்த இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா சிக்சர்களாக விளாசி அதிரடியாக விளையாடினார். இவரது ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வங்கேச வீராங்கனைகள் தவித்தனர். 17 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் என 39 ரன்கள் எடுத்திருந்த அவர், பன்னா கோஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் எட்டு ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, ஜெமிமா ராட்ரிகஸ் 34 ரன்களிலும், ரிச்சா கோஷ் 14 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே நிதானமாக விளையாடிவந்த தீப்தி ஷர்மா 11 ரன்களில் ரன்- அவுட்டாக இந்திய அணி 16.5 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 113 ரன்களை எடுத்தது.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் வேதா கிருஷ்ணமூர்த்தியின் அதிரடியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 142 ரன்களை எடுத்தது. வேதா கிருஷ்ணமூர்த்தி 11 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் உள்பட 20 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். வங்கதேச அணி தரப்பில் கேப்டன் சல்மா கதுன், பன்னா கோஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையும் படிங்க:மகளிர் டி20 உலகக்கோப்பை: மெக் லானிங் - ரேச்சல் ஹைன்ஸ் பார்ட்னர்ஷிப்பில் ஆஸி. வெற்றி!