மெல்போர்னில் இன்னும் சில மணிநேரங்களில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இதுவரை நான்கு முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி இன்று ஐந்தாவது முறை கோப்பை வெல்லுமா அல்லது இந்திய அணி முதன்முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் இவ்விரு அணிகளுக்கும் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், பிசிசிஐ தலைவர் கங்குலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இறுதி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணிக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது,"மழைக்காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற வேண்டிய அரையிறுதி போட்டியில் நாம் விளையாடவில்லை. உள்ளரங்கில் நாம் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டாலும், அது நமக்கு போதுமான நம்பிக்கையை தராது. ஏனெனில், உள்ளரங்கில் விளையாடுவதிலும், வெளியில் களத்தில் விளையாடுவதிலும் வித்தியாசம் உள்ளது.
இறுதி போட்டிக்கு முன்னதாக எங்களுக்கு எட்டு நாள்கள் ஓய்வு கிடைத்தது. ஆனால், யாரும் ஓய்வெடுக்க விரும்பவில்லை. எல்லோரும் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கின்றனர். போட்டியின்போது (இன்று) என்ன நடக்கும், எது நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை யோசித்தபதை விட அந்த தருணத்தை ரசித்து நமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே வெற்றிபெற வேண்டும் என்பதை மட்டும்தான் நாம் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.