மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரலியாவில் இன்று தொடங்கியது. சிட்னியில் நடைபெற்றுவரும் தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாகக் களமிறங்கிய ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இணை முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. இந்த ஜோடி நான்கு ஓவர்களில் 40 ரன்களைச் சேர்த்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி வீசிய ஆறாவது ஓவரில் ஷஃபாலி வர்மாவை 29 ரன்களில் அவுட்டாகினார்.
இதைத்தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் இரண்டு ரன்களுக்கு பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி 6.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 47 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து, ஜெமிமா ராட்ரிகஸ் - தீப்தி ஷர்மா ஆகியோரது நிதானமான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
தீப்தி ஷர்மா - ஜெமிமா ராட்ரிகஸ் இந்த ஜோடி 53 ரன்களை சேர்த்த நிலையில், ஜெமிமா ராட்ரிகஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், தீப்தி ஷர்மாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்தது. தீப்தி ஷர்மா 46 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் உட்பட 49 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜெஸ் ஜோனசென் இரண்டு விக்கெட்டுகளும், எல்லிஸ் பெர்ரி, டெலிசா கிம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இதையும் படிங்க:சச்சின் நினைவிலிருந்து நீங்காத பிரக்யான் ஓஜா ஓய்வு!