விளையாட்டில் சீண்டல்கள் இல்லாமல் இருக்காது. சில நேரங்களில் சின்ன சின்ன சீண்டல்கள் ரசிகர்களிடையே போட்டியை சுவாரஸ்யமாக்கும். ஆனால் அந்த சீண்டல்கள் அதிகமானால் வீரர்கள் மீது ரசிகர்களுக்கு கோபம் அதிகமாகும். கிரிக்கெட்டில் சீண்டல்கள் நடப்பது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். ஆனால் அது எப்போதும் அடிதடியில் முடியாது. போட்டி முடிவடைந்த பின் சீண்டல்களில் ஈடுபட்ட வீரர்கள் கைகுலுக்கி ஸ்பிரிட் ஆஃப் தி கேமை காப்பாற்றுவார்கள்.
ஆனால் நேற்று நடந்த யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களை தொடக்கம் முதலே வங்கதேச வீரர்கள் சீண்டிக்கொண்டே இருந்தனர். ஆனால் அந்த சீண்டல் இரண்டாவது ஓவரின் போதே சிறிதளவு எல்லை மீறியது. திவ்யன்ஷ் சக்சேனாவை வங்கதேச பந்துவீச்சாளர் வம்புக்கு இழுக்க, நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் விக்கெட்டை வீழ்த்தியபோது, வரம்பு மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்திய வீரர்கள் பந்துவீச்சின் போது வங்கதேசத்தின் சீண்டல்களுக்கு பதில் கொடுக்க, ஆட்டத்தில் பொறி பறந்தது. இறுதியாக வங்கதேசம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.