யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்தத் தொடரின் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. இதுவரை இந்தத் தொடரில் இவ்விரு அணிகளும் ஒன்பது முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் பாகிஸ்தான் அணி ஐந்து முறையும், இந்திய அணி நான்கு முறையும் வெற்றிபெற்றுள்ளது.
அதில், இந்திய அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நான்காவது வெற்றியை பதிவு செய்யுமா அல்லது இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களும் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, பாட்செஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom) நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 43.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரோஹைல் நசிர் 62 ரன்களிலும் தொடக்க வீரர் ஹைதர் அலி 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஷ்ரா மூன்று விக்கெட்டுகளும் கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுளும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அதர்வா அங்கோலேக்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 173 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த யஷஸ்வி ஜெய்வால், இன்றைய ஆட்டத்திலும் எந்த வித பதற்றமும் இல்லாமல் சிறப்பாகவே விளையாடினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து அவரது ஒவ்வொரு ஷாட்டும் நேர்த்தியாகவே இருந்தது.