யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில், அக்பர் அலி தலைமையிலான வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ப்ரியம் கார்க் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது.
இப்போட்டியின் முதல் பந்திலிருந்தே இந்திய வீரர்களிடம் ஸ்லெட்ஜிங் செய்துவந்த வங்கதேச பந்துவீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம், போட்டி முடிந்த பின் இந்திய வீரர்களிடம் சற்று எல்லையை மீறி நடந்துகொண்டார். அவர் இந்திய வீரர்களை நோக்கி ஒருமையில் திட்டியதால் இரு அணி வீரர்களுக்குள் இடையே மோதல் வெடித்ததால் அது பெரும் சர்ச்சையானது மட்டுமின்றி, இனி கிரிக்கெட் ஜென்டில்மேன் கோமாக பார்க்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பராஸ் ஹம்ப்ரே இந்திய வீரர்களை சமதானப்படுத்தினார். இது குறித்து இந்திய அணியின் மேலாளர் அனில் படேல் கூறுகையில், "போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் மோதலில் ஈடுபட்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அந்தச் சூழலில் அங்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது" என்றார்.