இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
முதலிடத்திற்கான போட்டியில் ஸ்மித் - கோலி
பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 888 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார்.
இப்போட்டியில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் லபுசாக்னே 4ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 5ஆவது இடத்திலும் இடத்திலும் நீடிக்கின்றனர்.
தரவரிசையில் சறுக்கிய புஜாரா, ரஹானே
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 40 ரன்களுக்கு மேல் அடித்தாலும், 2ஆவது இன்னிங்சில் டக்அவுட் ஆன புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் ஒரு இடம் சரிந்துள்ளனர்.
அதன்படி புஜாரா எட்டாம் இடத்திற்கும், அஜிங்கியா ரஹானே 11ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டனர். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 7ஆவது இடத்திற்கும், நியூசிலாந்தில் டாம் லாதம் 10ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
அஸ்வின், ஹசில்வுட் முன்னேற்றம்:
ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசில்வுட் மூன்று இடங்கள் முன்னேறி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு இடம் முன்னேறி 9ஆவது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த பும்ரா, இரண்டு இடங்கள் பின் தங்கி 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:NZ vs PAK : செஃபெர்ட்அதிரடியில் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!