ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் கேப்டன் முகமது நவீத். இவர், இதுவரை 39 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அணியின் தொடக்க வீரர் ஷாய்மான் அன்வர் பட். இவரும் அந்த அணிக்காக 40 ஒருநாள், 32 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ளார்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தகுதிச்சுற்று போட்டிகளில் இருவரும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் இருவரும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதுகுறித்து ஐசிசியின் ஒழுங்கு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முகமது நவீத், ஷாய்மான் அன்வர் இருவரும் ஐக்கிய அரபு அமீரக அணிக்காகச் சர்வதேச அளவில் விளையாடியவர்கள்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தகுதிச்சுற்று போட்டிகளின்போது இவர்கள் இருவரையும் மேட்ச் பிக்ஸிங் சூதாட்ட நபர்கள் அனுகியுள்ளனர். ஆனால், அது குறித்து இருவரும் ஐசிசிக்குத் தெரிவிக்காமல், ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இருவரும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட ஒப்புக்கொண்டதும், அதற்கான செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஐசிசி ஒழுங்குமுறை விதி 2.1.1. படி குற்றமாகும்.
இதையடுத்து, இரு வீரர்களுக்கும் 8 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறப்படும் 2019, அக்டோபர் 16ஆம் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வரும். ஐசிசியின் இந்தத் தடையைப் பின்பற்றி, தனிப்பட்ட தீர்ப்பாயங்களும் இவர்களுக்கு தடைவிதிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நீங்க வேணா மாலத்தீவு போங்களேன்... பும்ராவுக்கு டேக் டைவர்சன் கொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்