சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர்களுக்கான வீரர்களின் தரவரிசை வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் மிட்சல் சாண்ட்னர், ஆடம் ஸாம்பா ஆகியோர் இந்த பட்டியளில் டாப்-5 வரிசையில் முன்னேறி அசத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித்கான் ஐசிசியின் டி20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த தரவரிசைப் பட்டியலில் மீண்டும் ஒரு இந்திய பந்துவீச்சாளர் கூட டாப்-10 வரிசையில் இடம்பிடிக்கவில்லை.
அதே சமயம் 88ஆவது இடத்திலிருந்த இந்தியாவின் தீபக் சஹார் நேற்று நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 46 இடங்கள் முன்னேறி 42ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல்லை பின்னுக்கு தள்ளி ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
மேலும் இரண்டாம் இடத்தில் மேக்ஸ்வெல்லும், மூன்றாம் இடத்தில் ஸ்காட்லாந்தின் ரிச்சர்ட் பெரிங்டன்னும் நீடிக்கின்றனர். நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வேயின் சேன் வில்லியம்ஸ், அயர்லாந்தின் ஓ பிரைன், ஸ்டர்லிங் ஆகியோரும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். இதிலும் ஒரு இந்திய ஆல் ரவுண்டர் கூட டாப்-10 வரிசையில் இடம்பெறவில்லை.
பேட்டிங்குக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தப்பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லை பின்னுக்கு தள்ளி சக நாட்டவரான ஆரோன் பின்ச் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் மூன்றாம் இடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மாலனும், நான்காம் இடத்தில் காலின் முன்ரோ, ஐந்தாம் இடத்தில் மேக்ஸ்வெல் என அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றார். இந்த பட்டியலில் இந்திய அணியின் ரோஹித் சர்மா ஏழாவது இடத்திலும், கேஎல் ராகுல் எட்டாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடர்ந்து பேட்டிங்கில் மிரட்டும் ஷஃபாலி வர்மா