ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் (நடப்பு சாம்பியன்) உள்ளிட்ட 16 ஆடவர் அணிகளுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஆக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டோக்கியோவில் வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே, இந்த தொடர் 2022ஆம் அண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சில தகல்கள் வெளியாகின. இந்நிலையில், இது தொடர்பாக நேற்று ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகர் தலைமையில் மற்ற நாட்டு வாரியங்களுடன் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.