கிரிக்கெட் போட்டிகளில் பந்தை ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வீரர்கள் பந்தின் மீது எச்சில், வியர்வைவை உபயோகிப்பது தவறல்ல. அதுவே பந்தை பளபளப்பாக்க சாண்ட் பேப்பர் உள்ளிட்ட மற்ற செயற்கையான பொருட்களைப் பயன்படுத்தினால் அது சட்ட விரோதமாகும். தற்போது கரோனாவுக்கு பிறகான உலகத்தில் பந்து மீது எச்சில் தடவுவதும் தவிர்க்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கும் விதமாக, பந்தை சேதப்படுத்தாமல் இயற்கையான முறையில் பளபளப்பாக்கும் விதிமுறைகளிலும், எல்பிடபள்யூ விதிமுறைகளிலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் பரிந்துரை செய்துள்ளார்.
பந்தை சேதப்படுத்தாமல் பளபளப்பாக்குவது பற்றி பேசிய அவர், "பந்தை சேதப்படுத்துவது எப்போதுமே ஒரு பரபரப்பான விஷயமாக இருக்கிறது. அதனால் கடந்த காலங்களில் இயற்கையான முறைகளைக் கொண்டு பந்தை ஸ்விங் செய்ய பந்துவீச்சாளர்கள் உணரும் விஷயங்களை விவரித்து ஒரு பட்டியலை உருவாக்க கேப்டன்களிடம் ஐசிசி நிர்வாகிகள் கேட்க வேண்டும் என பரிந்துரைத்தேன்.
அப்படி உருவான அந்தப் பட்டியலில் இயற்கையான முறைக் கொண்டு பந்தை பளபளவாக்குவது சட்டப்பூர்ம் என்றும், மற்ற செயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது சட்டத்திற்கு எதிரானது எனவும் விதிமுறை கொண்டுவரப்பட்டது. தற்போது கிரிக்கெட் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எச்சில், வியர்வை ஆகியவற்றை பந்தின் மீது பயன்படுத்துவது சுகாதாரக் கேடாகக் பார்க்கப்படுகிறது. எனவே, வேறொரு புதிய விதிமுறையை அமல்படுத்த வேண்டும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, எல்பிடபள்யூ விதிமுறை குறித்து பேசிய அவர், "எல்பிடபள்யூவில் புதிய விதிமுறையைக் கொண்டுவர வேண்டும். அதன்படி, பந்து முதலில் பேட் மீது படாமல் வீரர்களின் கால் (Pad) மீது பட்டு அது ஸ்டெம்பை தாக்கினால் நடுவர் அவுட் என தீர்ப்பை வழங்க வேண்டும். பிட்சில் பந்து எங்கு வீசப்படுகிறது என்பதையும், அது அவுட் சைட் த லைனில் தாக்குகிறாதா என்பதையும் பார்க்காமல் அது ஸ்டெம்பை தாக்கினால் அவுட் என்றுதான் விதிமுறை இருக்க வேண்டும்.
எல்பிடபள்யூ விதிமுறையில் இந்த மாற்றத்தை கொண்டுவந்தால் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளை சுவாரஸ்யப்படுத்தும் வகையில் இருக்கும். டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிப்பதும், நடுவர் மறுபரீசிலனை முறையை (டிஆர்எஸ்) பயன்படுத்துவதும் குறைக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:மங்கூஸ் பேட்டை பயன்படுத்த வேண்டாம் - ஹெய்டனுக்கு அறிவுரை கூறிய தோனி!