இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெலிங்டனில் தொடங்கவுள்ளது. காயம் காரணமாக ஆறு வாரங்கள் ஓய்விலிருந்த நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் இந்தத் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், தான் கோலியின் விக்கெட்டை எடுக்க ஆர்வமாக இருப்பதாக டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
"கோலி சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரை போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய வேண்டும் என விரும்புவேன். அவர்களுக்கு எதிராக நான் சிறப்பாக பந்துவீசி எனது திறமையை சோதித்து பார்க்க விரும்புவேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அவர்களுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என்றார்.
31 வயதான டிரெண்ட் போல்ட் இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 256 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில், எட்டு ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் கோலி, டிரெண்ட் போல்ட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவில் இத்தனை உசைன் போல்ட்டா? ஸ்ரீநிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர்!