தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஆடும் 11 வீரர்களில் 5:6 என்ற விகிதத்தில்தான் வெள்ளை நிற வீரர்கள் சேர்க்கப்படவேண்டும். இதுகுறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் பேசுகையில், ''கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெள்ளை நிற வீரர்களுடன் போட்டியிட்டதால் மட்டுமே அணியில் எனக்கு இடம் கிடைத்தது. இதுகுறித்து பேசினால் சமூக வலைதளங்களில் நிச்சயம் விவாதங்கள் எழும். அதனை அறிந்தே சொல்கிறேன். அன்றையக் காலகட்டத்தில் எனது கிரிக்கெட் சராசரிகள், மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது.
அனைத்து வீரர்களுடன் போட்டியிட்டிருந்தால், எனக்கு அணியில் இடம் இருந்திருக்காது. கடந்த 30 வருடங்களாக தென் ஆப்பிரிக்க அணியில் 4 வெள்ளை நிற வீரர்கள் இடம்பெற்றால், 2 கருப்பின வீரர்கள் இடம்பெறவேண்டும். அதுதான் விதி. அந்த விதிக்கு முழுமையான ஆதரவளிக்கிறேன்.
தென் ஆப்பிரிக்காவின் சரித்திரத்தில் நிறவெறிக்கான தடயங்கள் உள்ளன. அது இன்றும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த நிறவெறியை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு நாம் கடத்தப்போகிறோம் என்ற கேள்வி என்னுள் அடிக்கடி எழுகிறது. இன்றும் நிறவெறித் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. கருப்பின மக்களுக்கு அரசியல் ரீதியாக சுதந்திரம் இருந்தாலும், அவர்களுக்கான பொருளாதார சுதந்திரம் இன்னும் கிடைக்கவே இல்லை. சமூகத்தில் இன்னும் கீழ்நிலையில்தான் உள்ளனர்.