கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில் டி20 கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் மார்ச் 29ஆம் தேதி மும்பையில் நடைபெறவிருந்தது. ஆனால், கோவிட் 19 வைரஸ் காரணமாக இந்தத் தொடர் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்தியாவிலும் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்துவருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த வைரசால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தீவிரமடைந்துள்ள இந்த கோவிட்-19 வைரசைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஐபிஎல் தொடர் நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், "தற்போதைய சூழலில் என்னால் எதுவும் கூற இயலாது. ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டபோது எந்த நிலையில் இருந்தோமோ அதை நிலையில்தான் இருக்கிறோம். கடந்த 10 நாள்களில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. எனவே ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. காத்திருக்க வேண்டியதுதான் ஒரே வழி" என்றார்.