கிரிக்கெட் என்றாலே பரபரப்பான ஆட்டங்கள், நெயில் பைட் நிமிடங்கள் என பல்வேறு தருணங்கள் இருப்பது எதார்த்தமான ஒன்று தான். அதிலும் அணியை வழிநடத்தும் கேப்டன்கள் இதுபோன்ற சமயங்களில் தவறுகள் நேரும்போது, பிறர் மீது கோபத்தை வெளிப்படுத்துவதுண்டு. உதாரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்றோர் மிகவும் உணர்ச்சிகரமிக்க கேப்டன்களாக வலம் வந்தனர். தற்போதைய கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அந்த பட்டியலில் உள்ளார்.
ஆனால், இவர்கள் யாரைப்போன்றும் இல்லாமல் ஒரு அமைதியான கேப்டன் இருந்தார் என்றால் தோனி என்றே 90 விழுக்காடு ரசிகர்கள் பதிலளிப்பர். காரணம் தோனி அன்று முதல் இன்று வரை எத்தனை வெற்றி, தோல்விகளை சந்தித்தாலும் அவரது முகத்தில் அதிகபட்சம் நாம் பார்க்கக் கூடியது ஒரு புன்சிரிப்பு மட்டுமே. அது மட்டுமல்லாமல் அணி தோல்வியின் பிடியில் சிக்கும் தருணங்களிலும் கூலாக பேட்டிங் செய்து வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் மாயஜாலக் காரர்தான் தோனி. இதனாலேயே தோனிக்கு கேப்டன் கூல் என்ற புனைப்பெயரும் இருந்துவருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியை சிறந்த முறையில் வழிநடத்திய அவர் பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்பும் அணியில் விக்கெட் கீப்பராக உள்ள தோனி உலகக்கோப்பை தொடருக்குப்பின் ராணுவப் பயிற்சி, பின் சிறிது ஓய்வு வேண்டும் என கேட்டுக் கொண்டதால் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் உள்ளார். இதற்கிடையே சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் பேசிய தோனி பேசுகையில், நானும் எல்லோரைப் போன்று தான். எனக்கும் கோபம் வரும். சில சமயங்களில் ஏற்படும் ஏமாற்றத்தால் நானும் பாதிப்படைந்து கோபம் உண்டாகும். ஆனால் அணியில் உள்ள மற்ற வீரர்களை ஒப்பிடுகையில் அதை கட்டுக்குள் வைத்திருப்பேன்.
கோபத்தை விட அந்த தருணங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதே எனது முடிவாக இருக்கும்மேலும் அணியில் ஒரு வீரர் சொதப்பும் போது அவருக்கு பதிலாக யாரை களமிறக்குவது போன்ற முடிவுகளை எடுப்பதே முக்கியமானதாக இருக்கும் என்றார்.
2007 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற சமயத்தில் ஒவ்வொரு நாளின் பயிற்சியின் போதும், பவுல்ட் அவுட் என்னும் முறையை பயிற்சி செய்தோம். பயிற்சியில் யார் அதிகமாக பவுல்ட் அவுட் செய்கிறார்ளோ அவர்களை பவுல்ட் அவுட்டுக்கான தேவை ஏற்படும்போது பயன்படுத்த எண்ணியதாக தோனி தெரிவித்தார்.
2007 டி20 உலகக்கோப்பையில் நடத்தப்பட்ட பவுல்ட் அவுட் அந்தத் தொடரில் க்ரூப் பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிவடைந்தது. அப்போது இந்த பவுல்ட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் மூன்று முறையும் ஸ்டெம்பில் சரியாக பந்தை எரிந்தனர். அதே சமயத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு முறை கூட பந்தை ஸ்டெம்பில் எரியவில்லை. இதனால் அப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய தோனி, அணியில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் வெற்றி தோல்விகளில் பங்குள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் அதை நிறைவு செய்ததால் தான் இந்திய அணி கோப்பையை வென்றது என்றார்.