இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகள் படைத்துவந்தாலும், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் எதிர்காலம் குறித்தே கேள்விகளும் பேச்சுகளும் அதிகம் எழுந்துள்ளன. இதற்கு பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தாலும், தோனியோ ஜனவரி வரை இதுகுறித்து என்னிடம் கேட்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது ஜனவரி கடந்து பிப்ரவரி மாதமும் வந்துவிட்டது. ஆனாலும் தோனி இன்னும் மெளனம் காத்துவருகிறார். இதனிடையே, தோனிக்கு மாற்று வீரராகக் கருத்தப்பட்ட ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங், பேட்டிங் இரண்டிலும் சொதப்ப அவரை அணி நிர்வாகம் கழிட்டிவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி மூலம் கே.எல். ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் பொறுப்பு வழங்கப்பட்டுவருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ராகுல், இதுவரை இல்லாத அளவில் பேட்டிங்கில் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்திவருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெல்ல முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.
இரண்டு அரைசதம் உள்பட 224 ரன்களைக் குவித்து தொடர் நாயகன் விருதையும் ராகுல் தட்டிச் சென்றார். இதனால், தோனியின் மாற்றுவீரராக கே.எல். ராகுல் இருக்கிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்தார்.